ஒரு சமயம் மகாவிஷ்ணு, மகாலக்ஷ்மியோடு பூலோகம் வந்து, தாமிரபரணி நதிக்கரையில் தங்கினார். பூமிக்கு வந்து தன்னுடன் இருக்காமல் லக்ஷ்மியோடு இருந்ததால் பூதேவி கோபம் கொண்டு பாதாளலோகம் சென்று விட்டாள். அதனால் உலகம் முழுதும் இருண்டு, வறண்டு போய்விட்டது. தேவர்கள் மகாவிஷ்ணுவை துதிக்க, அவர் பூதேவியை சமாதானம் செய்து, இருவரும் தமக்கு சமமே என்று அருளினார். இந்த பூமியை இருளிலிருந்து காத்ததால் பகவான் 'பூமிபாலன்' என்னும் திருநாமம் பெற்றார்.
மூலவர் காய்சின வேந்தன் என்ற திருநாமத்துடன் கிடந்த திருக்கோலம், புஜங்க சயனம், கிழக்கே திருமுக மண்டலத்துடன் ஸேவை சாதிக்கின்றார். பெருமாள் திருவயிற்றிலிருந்து தாமரைக்கொடி தனியாகக் கிளம்பிச் சென்று சுவற்றிலுள்ள பிரம்மாவின் தாமரை மலருடன் சேர்ந்துக் கொள்கிறது. தாயார் மலர்மகள் நாச்சியார், பூமகள் நாச்சியார், புளிங்குடிவல்லி ஆகிய திருநாமங்களால் வணங்கப்படுகின்றார். வருணன், நிருதி, தர்மராஜன் ஆகியோருக்கு பகவான் ப்ரத்யக்ஷம்.
ஆழ்வார் நவதிருப்பதிகளில் ஒன்று. இந்திரனுக்கு பிரம்மஹத்தி தோஷம் நீங்கிய ஸ்தலம். வஸிஷ்ட புத்திரர்களால் ராட்சஸனாக சபிக்கப்பட்ட யக்ஞசர்மா என்ற அந்தணர் பகவானால் சாப விமோசனம் பெற்றதாக ஸ்தல வரலாறு கூறுகிறது.
நம்மாழ்வார் 12 பாசுரங்கள் பாடியுள்ளார். காலை 9 மணி முதல் 12 மணி வரையிலும், மதியம் 1 மணி முதல் மாலை 6 மணி வரையிலும் கோயில் திறந்திருக்கும்.
|